Wednesday, December 21, 2011

இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை

ஆசிய-பசிபிக் பகுதியில் சீனா தனது இராணுவத்தை  பலப்படுத்தியுள்ள நிலையில் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முதல் முறையாக நேற்று(20.12.2011) பேச்சுவார்த்தை நடத்தின.
சீனாவுக்கும், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் உட்பட பல தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே கடல் எல்லை தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆசிய-பசிபிக் கடல் பகுதியில் சீனா தனது இராணுவத்தை பலப்படுத்தி உள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளுக்கிடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று வாஷிங்டனில் நடைபெற்றது.
இதில் அமெரிக்கா சார்பில் வெளிவிவகார இணை அமைச்சர்கள் ராபர்ட் பிளேக் மற்றும் குர்ட் கேம்ப்பெல், இந்தியா சார்பில் இணை செயலாளர்கள் ஜவேத் அஷ்ரப், கவுதம் பம்ப்வாலே, ஜப்பான் சார்பில் வெளிவிவகார அமைச்சர் கொய்ச்சிரோ கெம்பா ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பின்னர் இவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 3 நாடுகளும் இணைந்து ஆசிய-பசிபிக் பகுதியில் உள்ள நாடுகளின் நலன் பற்றி விவாதிக்க வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டது.
இதன் தொடக்கமாக இந்த கூட்டம் அமைந்துள்ளது. ஆசிய-பசிபிக் கடல் பகுதியில் சீனா தனது இராணுவத்தை பலப்படுத்தி இருப்பது பற்றி விவாதிக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.

ஆளில்லா விமானத் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது அமெரிக்கா

அமெரிக்கா, பாகிஸ்தான் உறவு சீர்குலைந்ததை அடுத்து, ஆளில்லா விமானத் தாக்குதலை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் கடந்த நவம்பர் மாதம் 26ம் திகதி நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலை அடுத்து அமெரிக்கா, பாகிஸ்தான் உறவு சீர்குலைந்தது.
உறவைச் சீர் செய்ய இருதரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் தெற்கு வஜீரிஸ்தான் உட்பட பல பகுதிகளில் அல்கொய்தா பயங்கரவாதிகளை அழிப்பதற்காக மேற்கொண்டு வந்த ஆளில்லா விமானத் தாக்குதலை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.
இருதரப்பு உறவு சீராவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இச்சூழலில் விமானத் தாக்குதல் அச்சூழலைக் கெடுத்துவிடக் கூடாது என்பது தான், இந்த தற்காலிக நிறுத்தத்திற்குக் காரணம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பில்லியன் கணக்கில் பாக்கி: அமெரிக்காவிடம் எந்த உதவியும் கேட்கப் போவதில்லை என பாகிஸ்தான் அறிவிப்பு

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்கா தர வேண்டிய நிதியுதவி பில்லியன் கணக்கில் பாக்கி இருப்பதால் இனி அந்நாட்டிடம் எந்த உதவியும் கேட்கப் போவதில்லை என பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் “கூட்டணி ஆதரவு நிதி”(சி.எஸ்.எப்) என்ற பெயரில் அமெரிக்கா மாதம் தோறும் பாகிஸ்தானுக்கு 100 முதல் 140 மில்லியன் டொலர் அளவிற்கு நிதியுதவி அளித்து வருகிறது.
அதாவது மாதம்தோறும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் செலவு செய்து விட்டு அதற்கான கணக்கு வழக்குகளை அமெரிக்காவிடம் அளித்து பணம் வாங்கிக் கொள்ள வேண்டும்.
இந்தாண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் பாகிஸ்தான் இராணுவம் 187 பில்லியன் டொலர் செலவழித்துள்ளது. இது பாகிஸ்தான் இராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட ஆண்டு நிதிநிலை அறிக்கைக்கான 495.2 பில்லியன் டொலரில் 38 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த ஓராண்டாகவே பாகிஸ்தான் அளிக்கும் கணக்கு வழக்குகள் மீது பல்வேறு காரணங்கள் கூறி நிதியுதவியை பாக்கி வைத்து வருகிறது அமெரிக்கா. அவ்வகையில் பாகிஸ்தானின் கணக்கில் 35 முதல் 40 சதவிகிதத்தை அமெரிக்கா நிராகரித்து விட்டது. இது அபோதாபாத்தில் ஒசாமா பின்லேடன் கொல்லப்படுவதற்கு முன் நடந்த விடயமாகும்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் வரை பாகிஸ்தான் கேட்ட நிதியான 12 பில்லியன் டொலருக்குப் பதிலாக அமெரிக்கா 8.6 பில்லியன் டொலர் நிதியுதவி அளித்துள்ளது. கடந்தாண்டு ஜூன் வரையிலான நிதியுதவி கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டது.
அதற்குப் பின் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தர வேண்டிய பாக்கி மட்டும் 900 மில்லியன் டொலரில் இருந்து 2.5 பில்லியன் டொலர் வரை இருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 600 மில்லியன் டொலர் பாக்கி உள்ளது. இதையடுத்து இனி பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவின் நிதியுதவியை கேட்கப் போவதில்லை என பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. அதேநேரம் பாக்கி தொகையை அமெரிக்காவிடம் கேட்பதா அல்லது கணக்கில் கழித்து விடுவதா என ஆலோசித்து வருகிறது.

வட கொரியாவை நவீன உலகத்திற்கு மீட்டு கொண்டு வர வேண்டும்: கனடா பிரதமர்

வட கொரியத் தலைவரான கிம் ஜாங்கின் மரணத்தை அடுத்து, அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கும் அந்நாட்டை நவீன உலகத்திற்கு மீட்டு கொண்டுவர வேண்டும் என்று கனடாவின் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தெரிவித்தார்.
கிம் ஜாங்(69) மாரடைப்பால் காலமானார். இவர் வட கொரியாவின் முடிசூடா மன்னனாக 17 ஆண்டுகள் ஆட்சி செய்தார். வட கொரியாவின் படை பலத்தை குறிப்பாக அணு ஆயுத பலத்தைப் அதிகப்படுத்தினார்.
இவருடைய திடீர் மரணம் இந்நாட்டின் வரலாற்றில் அவலம் நிறைந்த அத்தியாயம் ஆகும். புதிய வாய்ப்புகளுக்கு ஏற்றதொரு காலம் தற்போது தான் அமைந்துள்ளது. இதனைத் தவறவிட்டால் மக்களின் வாழ்க்கை இன்னும் மோசமாகிவிடும் என்று ஹார்ப்பர் தெரிவித்துள்ளார்.
இனிவரும் புதிய தலைமை உலக மக்களுடன் வட கொரியாவை நட்பு கொள்ள வழிவகுக்க வேண்டும் என்றார். இதுவரை தெற்கே உள்ள தன் சகோதர நாட்டிடம் மட்டுமே பகைமை பாராட்டிய வட கொரியா, உலக நாடுகளிடம் இருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
கனடாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சரான ஜான் பெயர்டு கூறுகையில், இனி வட கொரியா தன் வழிகளை மாற்றியமைத்து அந்நாட்டு மக்களின் உண்மையான தேவைகளை நிறைவேற்ற முயல வேண்டும் என்றார்.

ஜேர்மன் ஜனாதிபதி மீது புதிய ஊழல் குற்றச்சாட்டு

ஜேர்மனியின் ஜனாதிபதியான கிறிஸ்ட்டியன் உல்ப் எழுதிய புத்தகத்தை விளம்பரப்படுத்துவதற்கு கார்ஸ்ட்டன் மேஸ்க்மெயர் என்ற பெரும் பணக்காரர் 43000 யூரோக்களைச் செலவழித்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏற்கெனவே வீட்டுக்கடனால் தன் பழைய குடும்ப நண்பரான எகான் கீர்கென்ஸின் மனைவியிடமிருந்து 500,000 யூரோ வாங்கியதை இவர் மறைத்து விட்டார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்போது எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டு கடந்த 2008ஆம் ஆண்டில் உல்ப் எழுதிய “Better tell the Truth” என்ற புத்தகம் தொடர்பானது.
விடுதலைக் குடியரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எர்வின் லாட்டர் கூறுகையில், தன் நேர்மையையும், பொறுப்புணர்ச்சியையும் வெளிப்படுத்தும் விதமாக உல்ப் ஜனாதிபதி பதிவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.
அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஜனாதிபதியும், பிரதமரும் நல்ல புரிதலோடு கடமையாற்றுவதாகக் குறிப்பிட்டார்.
பொதுமக்களிடம் ARD தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் 70 சதவிகிதம் பேர் உல்ப் பதவி விலக வேண்டாம் என்றனர். ஆனால் 51 சதவிகிதம் பேர் மட்டுமே இவர் நம்பகமானவர் என்றனர்.

Saturday, December 17, 2011

ரூ.615 கோடிக்கு ஏலம் போன எலிசபெத் டெய்லரின் நகைகள்

ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் இதயங்களை கட்டிப் போட்டவர் எலிசபெத் டெய்லர்.
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கடந்த 1991ம் ஆண்டில் தி எலிசபெத் டெய்லர் பவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனம் ஒன்றை நிறுவினார்.
79 வயதான இவர் கடந்த மார்ச் மாதம் இறந்தார். இந்நிலையில் டெய்லரின் தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்டும் வகையில் கிறிஸ்டிஸ் அமெரிக்காஸ் ஏல நிறுவனம் சார்பில் அவரது புகழ்பெற்ற மற்றும் பாரம்பரியமான 269 வகையான நகைகள் ஏலம் விடப்பட்டன.
இவை அனைத்தும் ரூ.615 கோடிக்கு(இந்திய ரூபாய்) விற்பனையானது. இந்த ஏலத்தில் ரூ.150 கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. கணிப்பைப் போல் 6 மடங்கு அதிக தொகையை திரட்டி உள்ளது.
இதற்கு முன்பு 1987ம் ஆண்டில் விண்ட்சர் என்ற மன்னனின் மனைவி நகைகள் ரூ.265 கோடிக்கு ஏலம் போனதே அதிகபட்ச தொகையாக இருந்தது.
இப்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் அதிக அளவாக முத்து நெக்லஸ் மட்டும் ரூ.63 கோடியை ஈட்டியுள்ளது. இதுபோல் டெய்லரின் 2வது கணவரும், நடிகருமான ரிச்சர்டு புர்டன் பரிசாக தந்த 33 காரட் வைர மோதிரம் ரூ.46 கோடிக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

எலிசபெத் டெய்லரின் நகைகள் ஏலம்

பிரபல ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர். இவர் தனது 79வது வயதில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மரணம் அடைந்தார்.
இவர் ஆடைகள் மற்றும் நகைகள் அணிவதில் ஆர்வம் கொண்டவர். எனவே இவர் விதவிதமான நகைகள் மற்றும் ஆடைகளை சேகரித்து வைத்திருந்தார்.
அவை நியூயோர்க்கில் உள்ள கிறிஸ்டிஸ் அமெரிக்காஸ் என்ற ஏல மையத்தில் வைத்து ஏலம் விடப்படவுள்ளது.
அதற்காக எலிசபெத் டெய்லரின் 400 ஆடைகள், 269 விதமான நகைகள் மற்றும் அவர் வாங்கிய விருதுகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
அவற்றில் அவரது நண்பரான மறைந்த பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் பரிசாக வழங்கிய வைரம் மற்றும் நீலக்கல்லால் ஆன மோதிரமும் அடங்கும்.
அந்த மோதிரத்தை ஏலத்தில் எடுக்க ஏற்கனவே ஒருவர் 3 கோடி ரூபாயை(இந்திய ரூபாய்) முன்பணமாக வழங்கி உள்ளார்.
ஏலம் 4 நாட்கள் நடைபெற உள்ளது. நகைகள் மற்றும் உடைகள் மொத்தம் ரூ.150 கோடிக்கு(இந்திய ரூபாய்) ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஏல மையத்தின் தலைவர் மார்க் போர்டர் கூறுகையில், இவை அனைத்தும் நடிகை எலிசபெத் டெய்லர் தனிப்பட்ட முறையில் தெரிவு செய்த நகைகளாகும். 50 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் பயன்படுத்தப்பட்டவையாகும். அவற்றை அவர் மிகவும் விரும்பி தெரிவு செய்து சேகரித்து வைத்து இருந்தார் என்று தெரிவித்தார்.